திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பாக முனியாண்டி, திமுக சார்பாக மருத்துவர் சரவணன், அமமுக சார்பாக மகேந்திரன், நாம் தமிழர் கட்சி சார்பாக ரேவதி, மக்கள் நீதி மய்யம் சார்பாக சக்திவேல் உள்பட 37 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 421 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 111 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் சேர்த்து மொத்தம் மூன்று லட்சத்து ஆயிரத்து 557 பேர் உள்ளனர். அதுமட்டுமன்றி தமிழ்நாட்டிலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இளம் வயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது.
இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 விழுக்காடு. அதே வயதுடைய தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களில் (எட்டு லட்சத்து 98 ஆயிரத்து 979 பேர்) இது 0.9 விழுக்காடு.