மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயில்கள் (Alanganallur Muniyandi Swamy Temples) அமைந்துள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாக்களை நடத்த அந்த ஊர் மக்கள் இணைந்து ஒரு திருவிழா குழுவை அமைத்து திருவிழா நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகை செய்வதாகவும் இதற்கு தடை விதிக்கப்படுவதாக 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை மீறி மீண்டும் அங்குள்ள பல்வேறு கோயில்களில் திருவிழா குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்து அறநிலையத்துறை சார்பில் திருவிழா நடத்த உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு ஏற்கனவே, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமரவு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இதனால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜூன் 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் திருவிழா காலங்களில் திருவிழா குழு அமைப்பதால் பல்வேறு புகார்கள் வழக்குகள் வருகின்றது எனவும், இதனால், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் படி, விழாக் குழு அமைக்க எந்த விதிகளும் இல்லை எனவும் கூறினார்.
மேலும், எதிர்காலங்களில் திருவிழா குழு அமைக்கக் கூடாது என அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்த முரளிதரன், இதனை மீறும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவை தாக்கல் செய்தார். இதனைப் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க:குழந்தைகளுக்கு மருந்து மாற்றி கொடுததாக புகார்.. கோவில்பட்டி அரசு மருத்துவமனை விளக்கம் என்ன?