மதுரை: தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
மதுரை தல்லாகுளத்திலுள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவருபவர் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா (19). இவரது தந்தை முருக சுந்தரம் காவல் சார்பு ஆய்வாளராக உள்ளார்.
மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தேர்வு அச்சத்தால் இன்று (செப். 12) அதிகாலை வீட்டு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இறப்பதற்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ள தூக்கில் தொங்கியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனக்காக அளித்த பங்களிப்புகள் பற்றி உணர்ச்சி பொங்க எழுதியுள்ளார்.
'என் மீது குடும்பத்தினர் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். எனவே இந்த முறை விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அனைத்தும் வீணாகிவிடும். என்னை மன்னித்து விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, 2019இல் நீட் தேர்வு எழுதிய நிலையில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்காமல் போனதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த ஆண்டில் அவர் விருப்பபட்ட கல்லூரியில் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததுள்ளார்.
நேற்று (செப் .11) நள்ளிரவு வரை தேர்வுக்காக மாணவி படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஒரு வாரமாகவே தேர்வு குறித்து அவர் அச்சத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு நாளை (செப். 13) நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வுக்கு தயாராகிவந்த மாணவி அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் அரியலூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் விக்னேஷ் நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால், தனது வீட்டருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவர்களை உருவாக்குவதற்காக மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுகள், மாணவர்களின் உயிர்களை தொடர்ந்து பலியாக்கிவருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவி அனிதா, பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனிதாவை தொடர்ந்து ரித்து, வைஷியா, சுபஸ்ரீ என நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் பட்டியல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது அரியலூர் பகுதி மாணவர் விக்னேஷ், மதுரையைச் சேர்ந்து ஜோதி ஸ்ரீ துர்கா ஆகியோரின் அடுத்தடுத்த இறப்புகள் மனதை உலுக்குகிறது.
இதையும் படிங்க: சென்னை-ஊரடங்கு உத்தரவு; வேலையில்லா சோகத்தில் இருவர் தற்கொலை!