வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை ஒரு பைசா செலவின்றி சுத்தம் செய்யும் அருமையான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாமர விஞ்ஞானி அப்துல்ரசாக்.
பொதுவாக நமது வீடுகளின் மாடியில் சின்டெக்ஸ் போன்ற பெரிய அளவிலான தண்ணீர் தொட்டிகளை வைத்து, போர்வெல் குழாய்கள் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை அதில் சேமித்து, பின்னர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
நாளடைவில் அத்தொட்டிகளில் படியும் மண், உப்பு தாதுகள் தொட்டியில் அசுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசும் நிலையும் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது வசதியான ஏதேனும் ஓர் நாளிலோ தொட்டிக்குள் இறங்கித் தூய்மைப்படுத்தும் பணிகளைச் செய்கின்றனர்.
தொட்டிகளைத் தூய்மை செய்து தருகின்ற நபர்களின் மூலமும் சிலர் சுத்தம் செய்து கொள்கின்றனர். இதற்கு சராசரியாக ரூ.1500-லிருந்து ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக புதிய வடிவிலான தண்ணீர் தொட்டி மாதிரியை மதுரையைச் சேர்ந்த பாமர விஞ்ஞானி அப்துல் ரஸாக் தனது நண்பர் ஜலாலுதீன் சபீரோடு இணைந்து உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அப்துல் ரஸாக் அளித்துள்ள பேட்டியில், “தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்கின்ற பணி சவாலாகவும், செலவு மிக்கதாகவும் இருப்பதால், அதனை எளிதாக்க ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவாக இருந்தது.
அதற்காக, இரண்டு மாதிரிகளை எனது நண்பர் ஜலாலுதீனுடன் இணைந்து செய்தேன். இந்த வடிவமைப்பு கொண்ட தொட்டிகளில் தண்ணீர் தேக்கும்போது, மண் மற்றும் உப்பு படிமங்கள் அடிப்படையில் நாங்கள் உருவாக்கியுள்ள கூம்புக் குழாய்க்குள் சென்று தங்கிவிடும். தொட்டியின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள வெளியேற்று குழாய் மூலமாக அனைத்தையும் வெளியேற்றி விடலாம்.
தொட்டியை வடிவமைக்கும்போதே இந்த அமைப்பையும் செய்துவிட்டால் பிறகு வேறு எந்த தேவையும் ஏற்படாது. அவ்வப்போது கழிவை வெளியேற்றும் குழாயை மட்டும் திறந்துவிட்டால் போதும் அனைத்தும் வெளியேறிவிடும். எனக் கூறினார்.
மேலும், அப்துல் ரஸாக்கும், ஜலாலுதீனும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மாதிரி தொட்டி குறித்து மத்திய அரசிடம் காப்புரிமைக்கு விண்ணப்பித்து, அதற்குரிய எண்ணைப் பெற்றுள்ளனர். இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், பரவலாக இத்தொட்டியை விற்பனைக்குக் கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி செய்தால் அனைத்து மக்களுக்கும் இதனை அடக்க விலையில் செய்து தருவோம் என்கின்றனர்.