நெல்லை தருவை அருகே கண்டித்தாங்குளத்தைச் சேர்ந்த ஞானபால் ஜான்சன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஆதிமிதிப்பான்குளம், தருவை, ஈஸ்வரியாள்புரம், ஆலங்குளம் பகுதிகளில் பலர் சட்டவிரோத கல் குவாரிகளை நடத்தி வருகின்றனர். இந்தக் குவாரிகளில் கற்களை வெட்டி எடுக்க சக்தி வாய்ந்த வெடிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் கற்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விழுகின்றன.
இக்கற்களை நீர்நிலைகளிலும் நீர்பாசனக் கால்வாய்களிலும் போட்டு வைத்துள்ளனர். இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்தக் குவாரிகளால் கிராமத்தினர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக முதியோர், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல் குவாரிகளால் ஆதிமிதிப்பான்குளம், கண்டித்தாங்குளம், ஆலங்குளம் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர். எனவே அவற்றுக்குத் தடை விதிக்கவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை குவாரி நடத்துவோரிடம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர், கனிவளத்துறை துணை இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.