மதுரை ரயில் நிலையம் அருகே எம்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வரும் பழமையான பள்ளிகளில் இதுவும் ஒன்று. இப்பள்ளி வளாகத்தில் (டவுன் பிரைமரி) நகர ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இருபாலர் பயிலும் இந்தப் பள்ளியின் வகுப்பறைகளை ரயில் பெட்டிகளைப் போன்று வடிவமைத்து அசத்தியுள்ளனர். இது பல மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர்.
இதுகுறித்து எம்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ரவி கூறுகையில், 'மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக நமது கல்வி முறைகள் அமைய வேண்டும் என்பதில் எங்களது பள்ளி ஆசிரியர்கள் எப்போதுமே துடிப்புடன் இருப்பார்கள். அவர்களது ஒத்துழைப்பும், ஆதரவும்தான் இந்த வெற்றிக்கு அடிப்படையானது' என்றார்.
ஆசிரியர்கள் கூறுகையில், "மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் அவர்களுக்கு புதுவிதமான உணர்வை அளிப்பதற்காகவே ரயில் பெட்டி போன்ற வகுப்பறையை உருவாக்கினோம். பள்ளிக்கு அருகில் உள்ள மதுரை ரயில் நிலைய சந்திப்பு அமைந்திருப்பதால், தென்னக ரயில்வேயை பெருமைப்படுத்துவதும் தங்களின் நோக்கமாக இருந்தது. இங்கு மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்காக தனியாக வகுப்பறை அமைக்கப்பட்டு சிறப்புக் கவனமும் கொடுக்கப்பட்டு வருகிறது", என்றார்.
தனியார் பள்ளிகள் மீதான பெற்றோர்களின் மோகம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாணவர்களை ஈர்ப்பதில் கடும் போராட்டத்தை நடத்திவருகின்றன. இந்தாண்டு அவர்களின் முயற்சிக்கு பெரும் ஆதரவு கிடைத்திருப்பதன் அறிகுறியாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.