மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் சாலையின் நடுவே இன்று நண்பகலின் போது திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாகச் சென்ற மக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், பள்ளத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்று வழிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினரிடம் கேட்டபொழுது, அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மணல் அரிப்புட்டு ஏற்பட்டு பள்ளம் உருவானதாக தெரிவித்தனர். இச்சம்பவத்தால் பீதி அடைந்துள்ள மதுரை மக்கள், இதுபோன்று வேறெங்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.