உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் மிகத் தீவிரமாக இந்த வைரஸ் தொற்று பரவிவருகிறது. தமிழ்நாடு அரசின் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையுடன் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களும் இணைந்து முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறைவாசிகள் மூலம் முகக்கவசம் தயார் செய்ய காவல் துறை இயக்குநர், சிறைத்துறைத் தலைவர் பழனி உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் சுகாதாரமான முறையில் முகக்கவசம் மிக வேகமாகத் தயாரிக்கப்பட்டுவருகிறது.
ஒரு லட்சம் முகக்கவசங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தயாரிப்பு வேலைத் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை 34 ஆயிரம் முகக்கவசங்கள் தயார் செய்யப்பட்டு 16900 முகக் கவசங்கள் காவல் துறை, சுகாதாரத் துறை, அரசின் பிற துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.