பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மதுரை செல்லூர் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகில் தனியாகத் தவித்துக் கொண்டிருந்துள்ளது. இந்தக் குழந்தையை, அவ்வழியாகச் சென்ற காவல் துறையினர் அழுகுரல் கேட்டுக் கவனித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கூடிய பொதுமக்களிடம் விசாரித்ததில், பச்சிளங்குழந்தை அநாதையாக விட்டுச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தை காவல் துறையினரால் மீட்கப்பட்டது.
அக்குழந்தைக்கு மதுரை அண்ணாநகர் சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் லில்லிகிரேஸ், 'பொன்னியின் செல்வன்' எனப் பெயர்சூட்டி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தார்.
இந்தக் குழந்தை மாவட்ட தத்துவள மையத்தில் பாதுகாக்கப்பட உள்ளதாகவும், யாரேனும் குழந்தையை தவறவிட்டிருந்தால் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவைத் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.