சென்னை: சென்னை துறைமுகத்தில் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு நான்கு இழுவை கப்பல்கள் மற்றும் அன்னம் என்கிற எண்ணெய் மீட்பு கப்பல் உள்ளிட்டவைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதில், அப்போது துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய புகழேந்தி என்பவர் 70 லட்சம் ரூபாய் முறைகேடாக லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த புகார் குறித்து துறைமுக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது குறித்து சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து டெண்டர் விடப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்போது துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற புகழேந்தி என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் சென்னை மந்தைவெளியில் உள்ள சன்சைன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!
இதேபோல் ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவில் உள்ள நிதி நிறுவன மேலாளர் ஒருவர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கத்தில் காண்ட்ராக்டர் ஒருவர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல் திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஆறு இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சோதனையில் சிபிஐ அதிகாரிகள் 27 லட்ச ரூபாய் பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்