மதுரை கருப்பாயூரணி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(80) கோழி இறைச்சி கடை வியாபாரி. இந்நிலையில் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்துல் ரஹீம் வீட்டின் அருகிலுள்ள பலசரக்கு கடையில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே காவல் துறையினர் கூட்டமாக நிற்கக்கூடாது, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள் என்று வலியுறுத்தினர். ஆனாலும் கூட்டத்தினர் கேட்கவில்லை.
அப்போது கடை வியாபாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அப்துல் ரஹீம் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருந்ததாக தெரிகிறது. எனவே காவல் துறையினர் கூட்டத்தை கலைக்க லேசாக தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் அப்துல் ரஹீமுக்கு படுகாயம் ஏற்பட்டது. எனவே இவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . ஆனாலும் அப்துல் ரஹீம் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கருப்பாயூரனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து காவல் துறையினர் தாக்குதலில் அப்துல் ரஹீம் இறந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் கருப்பாயூரணி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி!