பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசிய மனதின் குரல் நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகன், கரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியதை குறிப்பிட்டு பாராட்டி பேசினார். இதனையடுத்து மதுரையில் உள்ள பாஜகவின் நிர்வாகிகள் மோகனின் வீட்டிற்கே வந்து பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், அன்று மாலை அவர் பாஜகவில் இணைந்ததாகவும் குடும்பத்துடன் உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டதாகவும் மதுரை பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத்திற்கு மோகன் அளித்த பேட்டியில், "எல்லாக் கட்சியும் எனக்கு வேண்டும். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி ஆகிய எல்லோரும் எனக்கு வேண்டும். மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டினார். நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லை" என அவர் கூறினார்.
முடி திருத்தும் தொழிலாளி மோகன் பாஜகவில் இணைந்தது குறித்து நேற்று செய்தி வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் சில ஊடகங்களில் மோகன் குறிப்பிட்டதாக சில செய்திகள் வெளியாகின. இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த சில பாஜக உறுப்பினர்கள் அவரது வீட்டிற்கு வந்து விளக்கம் கேட்டதால் மோகன் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமரின் பாராட்டில் நனைந்த மதுரை மோகன் அடுத்து செய்த காரியம்...?