மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண வைபவ நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்த பெருமையைப் பெற்ற, பழம்பெருமை வாய்ந்த ஊர் என்பதால் திருமாங்கல்யபுரம் என்ற பெயர் பெற்று விளங்கியது, இவ்வூர். பின்னர் இப்பெயர் மருவி 'திருமங்கலம்' என ஆனது வரலாறு.
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலிருந்து தான், மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற அதே நேரத்தில், திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்திலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சொக்கநாதர் மீனாட்சி உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. கோயில் சிவாச்சார்யார்கள் மீனாட்சி சொக்கநாதராக இருந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சொக்கநாதர் மீனாட்சிக்கு திருமாங்கல்யம் சூட்டும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படிங்க...ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்கள்