ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி (நாளை) முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறந்து பக்தர்களை அனுமதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்பகுதிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், கோயிலின் உள்ளேயும் வெளியேயும் தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை மாநகராட்சி, கோயில் பணியாளர்கள் 70 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அரசு விதித்துள்ள வழிகாட்டுதலின்படி நாளை முதல் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கும் ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும்போது முகக் கவசங்கள் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற அரசின் வழிகாட்டுதல்களும் நடைமுறைகளும் தீவிரமாகப் பின்பற்றப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது