உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாக்களில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா பரவலுக்கு மத்தியில் இந்நாள்களில் நடக்கும் அம்மனின் அலங்காரத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நவராத்திரி நாள்களில் தினமும் மாலை நான்கு மணி முதல் 5.30 மணி வரை, மாலை 6.45 மணி முதல் இரவு எட்டு மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்சவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள், மறுநாள் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை தரிசிக்கலாம்.
அந்த வகையில் அக்டோபர் 17ஆம் தேதி நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், அக்டோபர் 18ஆம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம் செய்யும் அலங்காரத்திலும், அக்டோபர் 19ஆம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் அலங்காரத்திலும், அக்டோபர் 20ஆம் தேதி விறகு விற்றல் அலங்காரத்திலும், அக்டோபர் 21ஆம் தேதி கடம்பவன வாசினி அலங்காரத்திலும், அக்டோபர் 22ஆம் தேதி வேல்வளை செண்டு கொடுத்தல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று (அக்.23) பட்டாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளிய அம்மன், நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான இன்று (அக்.24) மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி விழாவின் கடைசி நாளை (அக்.25) சிவபூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயிலில் 7ஆம் நாள் நவராத்திரி விழா: பட்டாபிஷேக அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!