மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கரோனா பெருந்தொற்று பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட கோயில், தமிழ்நாடு அரசின் தளர்வுகளுக்கு உட்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் கோயிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், பக்தர்களின் தொடர் கோரிக்கையை ஏற்றும் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்தும் இன்று முதல் முதியவர்கள், சிறுவர்கள் கோயிலுக்கு வர கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோன்று ஸ்வாமி சிலைக்கு பூஜை பொருள்கள், மாலைகள் செலுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மாலை, பூக்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பூஜை பொருள்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோயிலுள்ள ஐந்து கோபுர வாசல்களில் இரண்டில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். விரைவில் மீதமுள்ள கோபுர வாசல்களைத் திறக்க ஆவன செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.