மதுரை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கட்டுப்பாட்டு அறையில் காவல் நிலையங்களுக்கு அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக தானியங்கி கிருமிநாசினி தெளிப்பு கருவியை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு, தானியங்கி கிருமிநாசினி கருவியை காவல் நிலைய அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ”அனைத்து அரசு அலுவலகங்களில் சோப்பு போட்டு கை கழுவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அவ்வாறு செயல்படுத்த முடியாத அலுவலகங்களிலும் தானியங்கி கிருமிநாசினி கருவியை பொருத்துவதற்காக முயற்சி எடுத்துள்ளோம்.
மாநகர எல்லையில் இருக்கும் 27 காவல் நிலையங்களுக்கு இக்கருவி வழங்கப்பட்டது. தற்போது புறநகர் காவல் நிலையத்திற்கு அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 50 காவல் நிலையங்களுக்கு தானியங்கி கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று நிலைமை தினம்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மதுரையின் கரோனா நிலவரத்தை முதலமைச்சர் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறார். மதுரையில் நிலைமையை பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்” என்றார்.
இதையும் படிங்க:'அன்பும் பாசமும் நிறைந்த முதலமைச்சருக்கு கரோனா வராது' -செல்லூர் ராஜூ