மதுரை: வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர், மதுரையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று (மார்ச். 13) அவர் தனது கடை ஊழியர் கோவிந்தராஜ் மற்றும் ஓட்டுநர் பிரவீன்குமாருடன் நாகர்கோவில் நோக்கி ரூ.2.50 கோடி பணத்துடன் சென்றுள்ளார்.
இயற்கை உபாதை
கார் மதுரை, விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேசநேரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரும் நகைக்கடை ஊழியரும் காரிலிருந்து கீழே இறங்கி இயற்கை உபாதையைக் கழித்துள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடை அதிபர் தர்மராஜை கத்தியைக் காட்டி மிரட்டி காருடன் கடத்திச்சென்றுள்ளனர்.
பணம் பறிப்பு
பேரையூரை அடுத்த அத்திப்பட்டி என்ற இடத்தில் வைத்து தர்மராஜ் வைத்திருந்த பணம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்து விட்டு, அவரை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
3 பேர் சதித்திட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை திருமங்கலம் தாலுகா காவல் துறையினர் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அதில் கார் ஓட்டுநர் பிரவீன்குமார் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
அதிரடியாக கைது
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த பிரவீன்குமாரின் நண்பர்கள் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண்குமார் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து பணம், தங்க மோதிரம், செல்போன், காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, 3 பேரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தினர்.
தனிப்படைக்கு பாராட்டு
கடத்தல் சம்பவம் நடைபெற்ற 9 மணி நேரத்திற்குள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் டிஐஜி பொன்னி வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: பெட்ரோல் போட வந்த இடத்தில் தகராறு - போதை கும்பல் கைது