மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தமிழகத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. மலைகளின் பின்னணியில் 7 நிலைகளும், 7 கலசங்களும் கொண்டு, 120 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த கோயில் ராஜகோபுரத்திற்குக் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்துவதற்காகக் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் துவங்கப்பட்டது.
அதன்படி ரூ.2 கோடி மதிப்பீட்டில் பழமையான முறைப்படி பல்வேறு பொருட்களை வைத்துப் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது கோபுரம் புதுப்பொலிவு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி குடமுழுக்கிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை அடுத்து வழக்கத்தைவிட அதிகப்படியான பக்தர்கள் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் தினமும் வருகைதந்தனர். இந்த நிலையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் 06.12. 2023 (புதன்கிழமை) இன்று உண்டியல் திறப்பு நடைபெற்றது.
இந்த உண்டியல் திறப்பு நிகழ்வில் மதுரை மாவட்ட உதவி ஆணையர் த.வளர்மதி, திருக்கோயிலின் துணை ஆணையர் மு.ராமசாமி, திருக்கோயில் அறங்காவலர்கள் அ.பாண்டிய ராஜன், ஆ.செந்தில்குமார், ஆர்.ரவிக்குமார், பி.மீனாட்சி, தக்கார் பிரதிநிதி நல்ல தம்பி, மேலூர் ஆய்வர் ஐயம் பெருமாள், கண்காணிப்பாளர்கள் அருட்செல்வம், பிரதீபா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் திருக்கோயில் உண்டியல்களில் இருந்து ஒட்டுமொத்தமாக ரொக்கமாக 84 லட்சத்து 15 ஆயிரத்து 114 ரூபாயும், தங்கம் 75 கிராம் மற்றும் வெள்ளி 665 கிராம் ஆகியன பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியது கிடைக்கப்பெற்றதாகக் கோயில் நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அலட்சியம், பேராசை - தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்!