மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, மதுரை மாநகரில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாலிருஞ்சோலை அழகர்கோயிலில் இருந்து நேற்று (மே 3) மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, காதக்கிணறு வழியாக இன்று (மே 4) காலை 7.30 மணியளவில் மூன்று மாவடியை வந்தடைந்தார்.
அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும், பக்தர்களும் கள்ளழகரை எதிர் கொண்டு வரவேற்றனர். அப்போது 'கோவிந்தா' எனும் முழக்கம் எழுப்பினர். கோ.புதூரில் உள்ள மாரியம்மன் கோயில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டபம் ஆகிய இடங்களில் எழுந்தருளிய கள்ளழகர், இன்று இரவு 9 மணியளவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடைகிறார்.
இதனையடுத்து நாளை (மே 5) அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில் அருகே உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர், அதிகாலை 5.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து அழகர்கோயிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை வழிநெடுகிலும் சுமார் 480 மண்டகப்படிகளில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதற்காக மூன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிங்க: Madurai Meenakshi Amman: மதுரை மாநகரில் வலம் வந்த மீனாட்சி.. சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம்!