மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்துநிலையம் அருகே அமைந்துள்ளது, ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் பூக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் பூக்களும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
மத்திய அரசின் புவிசார்குறியீடு பெற்ற பெருமையைக் கொண்ட சிறப்பு வாய்ந்த 'மதுரை மல்லிகை' நாள்தோறும் 50 டன்னுக்கும் மேலாக இங்கே விற்பனையாகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக நாளை ஆடி அமாவாசை தினம் என்பதால் ஒரு கிலோ மதுரை மல்லிகை விலை உயர்ந்து ரூ.900க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பூக்களின் விலையும் ஆடி அமாவாசையை முன்னிட்டு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பிச்சிப்பூ ரூ.500க்கும், முல்லை ரூ.500க்கும், சம்பங்கி ரூ.100க்கும், செண்டு மல்லி ரூ.70க்கும், பட்டன் ரோஸ் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆடி அமாவாசை தினம், நாளை என்பதால் மீண்டும் நாளை காலை விலை சற்று கூடுதல் ஆவதற்கு வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!