புவியியல் சார் குறியீடு தகுதிபெற்ற மதுரை மல்லிகை அதன் மணத்திற்கும் தரத்திற்கும் உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. மதுரை மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் உற்பத்தியில் நூற்றுக்கணக்கான உழவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் மதுரை மல்லிகைக்கு விலை நிர்ணயம்செய்யப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கு மட்டுமன்றி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது பரவிவரும் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், தற்போதைய சூழலில் விழாக்கோலம் காண வேண்டிய மதுரை கட்டுப்பாடு காரணமாக கலையிழந்து காணப்படுகிறது.
இதனால் மதுரை மலர் சந்தையில் பூவின் விலை கடந்த சில நாள்களாக கடும் சரிவைச் சந்தித்துவருகிறது. மதுரை மல்லிகை ரூபாய் 100-க்கு சரிவைச் சந்தித்துள்ளது. சம்பங்கி, செண்டு மல்லி, அரளி தலா ரூ.50, ரோஜா ரூ.70, கனகாம்பரம் ரூ.300, பிச்சிப்பூ ரூ.200, முல்லை ரூ.150 என அனைத்துப் பூக்களின் விலையும் கடுமையான சரிவைக் கண்டுள்ளன.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமானால் உற்பத்திசெய்யும் உழவர்களும் வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என மலர் வணிக வளாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 10,986 பேருக்கு கரோனா உறுதி!