மதுரை: தமிழகம் முழுவதும் வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படும். அதில் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தேதிகளை அறிவித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வருடமும், திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அவனியாபுரத்தில் அமைந்துள்ள திடலில், பொங்கல் தினமான 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதேபோல, பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று 16ஆம் தேதியும் மற்றும் அதற்கு மறுநாள் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
வருடந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே, இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை குறிச்சி குளக்கரையில் 20 அடி உயர் திருவள்ளுவர் சிலை நாளை திறப்பு!