நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாக குழுத் தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் அவர் கூறியதாவது, ” நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம், டிடிடிஏ ஆகியவற்றிற்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்படுகின்றனர். சிஎஸ்ஐ திருமண்டலத்தில் 23.4.2017 முதல் நடைபெற்ற இடமாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்னும் இரு வாரங்களில் இந்த நிர்வாகிகளிடம் வழங்கவேண்டும். திருமண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் ஆகியவற்றை நிர்வாகக் குழு முன்வைத்து நிர்வாகிகள் மேற்பார்வையில் முடிவெடுக்க வேண்டும்.
இதில் ஏதேனும் பிரச்னை நேர்ந்தால் நிர்வாகிகளின் முடிவே இறுதியானதாக இருக்கும். இடமாறுதல், நியமனங்களை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகளிடம் மனு அளிக்க வேண்டும். நெல்லை திருமண்டலம், டிடிடிஏ கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான சம்பளத்தை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.”, என்று நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டார்.