மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த காமாட்சி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்தார். அதில், தனது கணவர் கார்க்கி (37), கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகவும், பின்னர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணவரின் பாட்டி பூவு (எ) பூவம்மாள் (72) உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவரை பாட்டியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதித்து மூன்று நாள் பரோல் வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதே வழக்கில் கைதான கார்க்கியின் உறவினர்கள் முத்துராஜா, அன்பு ஆகியோருக்கும் பரோல் கேட்டு மனுக்கள் தாக்கல்செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "தற்போது காவல் துறையினர் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நேரத்தில் பரோல் வழங்கினால் கைதிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது.
காவல் துறையினர் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தும் நிலையும் உள்ளது. காவலர்களின் நிலை ஆதரவற்றவர்கள்போல் உள்ளது. குருபூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சியினர் வருவதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தனர். மூன்று பேருக்கு பரோல் கேட்டு தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை: பால்குடம் எடுத்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்