மதுரை: அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வரும் என்ஐஏ சோதனைகளும், கைதுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும் என்ஐஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் ஆகிய இருவரும் தேசிய புலனாய்வு முகமை என்ற என்ஐஏ-வால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் நடத்தியது.
அதன்பிறகு தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என்ஐஏ-வைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் என்ஐஏ-வுக்கு எதிராக தீர்மானம் இயற்றியுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்றி போராட்டம் நடத்தியுள்ளன.
தமிழக வழக்கறிஞர்கள் என்ஐஏ-வுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தி வேண்டிய அவசியம் ஏன் வந்தது..? கடந்த 2022-ஆம் ஆண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, அந்த அமைப்பைச் சேர்ந்த பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிணை எடுப்பதற்கான வழக்கில் வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பூந்தமல்லி மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர். கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் என்ஐஏ மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள கூலித் தொழிலாளி ஜின்னா என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார்.
சுயநினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வலிப்பு வந்தவுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விசயத்தைக் கேள்விப்பட்டுச் சென்ற வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் மருத்துவமனை முதல்வரிடம் பேசி அதனை வழக்காகப் பதிவு செய்து, அதனை தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு என்ஐஏ டிஎஸ்பி செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனுவும் அளித்தனர்.
உடனடியாக என்ஐஏ எஸ்பியின் வழக்கறிஞர் அப்பாஸ் மீது என்ஐஏ குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார் என புகார் அளித்து, இதற்கான முதல் தகவல் அறிக்கை மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் பதியப்படுகிறது. வழக்கறிஞர்கள் அப்பாஸ் மற்றும் யூசுப் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடுகிறார்கள், என்ஐஏ-வை எதிர்க்கிறார்கள் என்பதை கருத்திற் கொண்டு, எந்த வழக்கில் அவர்கள் ஆஜரானார்களோ, அதே வழக்கில் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி கைது செய்திருக்கிறார்கள்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இப்போது என்ஐஏ செய்தது சரியா என்ற கேள்வி எழுகிறது. வழக்கறிஞர்களுக்கு தொழில் உரிமை என்பது அரசியல் சாசனத்தால் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையைப் பறிப்பதற்கான அதிகாரம் என்ஐஏ-வுக்கோ மாநிலக் காவல்துறைக்கோ யாருக்கும் கிடையாது.
ஒரு வழக்கில் ஆஜராவது அந்த வழக்கறிஞரின் அரசியல் சட்டம் சார்ந்த உரிமை மற்றும் கடமையாகும். நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதிமன்றம் என இந்திய அரசியல் சட்டம் தனித்தனி அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகளைக் கொண்டுள்ளது. நீதித்துறை என்பது சுதந்திரமான கட்டமைப்பைக் கொண்டது. இதில் யாரும் தலையிடவோ அச்சுறுத்தலோ செய்ய முடியாது. அந்த நீதித்துறையின் ஓரங்கம்தான் வழக்கறிஞர்கள். அவர்கள் இல்லாமல் நீதித்துறை இயங்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராவதை காவல்துறை மிரட்டி தடுத்தால், நீதித்துறை என்ன ஆகும்..? இதுபோன்ற ஆஜராகின்ற வழக்கறிஞர்களை போலியாக வழக்கில் கைது செய்வது, நீதித்துறையை தேசியப் புலனாய்வு முகமை அச்சுறுத்தும் நடவடிக்கை என்றே நாங்கள் கருதுகிறோம். நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என வழக்கறிஞர்கள் கருதுவதால்தான் போராட்டம் வெடித்துள்ளது.
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மூன்று முறை தடை செய்யப்பட்டது. அவர்களுக்காக ஆர்எஸ்எஸ், பாஜக வழக்கறிஞர்கள் ஆஜரானார்களா இல்லையா..? அத்வானி ரத யாத்திரை நடத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதற்கான வழக்கு தற்போது வரை நடைபெறுகிறது. இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ், பாஜக அல்லது பொதுவான வழக்கறிஞர்கள் ஆஜரானார்களா இல்லையா..? அவ்வாறு ஆஜரான வழக்கறிஞர்களையே அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தால் என்ன ஆகும்..? எந்த அமைப்புக்காகவும் வழக்கறிஞர்கள் ஆஜராவது என்பது அவர்கள் உரிமை மட்டுமல்ல கடமையும்கூட.
என்ஐஏ என்பது அரசியல் சட்ட விரோத நிறுவனமாகும். என்ஐஏ என்ற சட்டத்தை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கோ ஒன்றிய அரசுக்கோ அதிகாரம் உண்டா என்றால் அரசியல் சட்டப்படி நூறு சதவிகிதம் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய, மாநில அட்டவணை என்றும் பொது அட்டவணை என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. அவரவர் சட்டமியற்றிக்கொள்ள அதிகாரம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் அட்டவணையில் எங்கேனும் காவல்துறை என்று உள்ளதா..? ஒரு இடத்தில்கூட கிடையாது. ஆர்மி, நேவி, ஏர்ஃபோர்ஸ் மட்டும்தான் அந்தப் பட்டியலில் வரும். ஆனால் மாநில அரசின் பட்டியலில் குறிப்பாக 7-ஆவது அட்டவணையில் காவல்துறை என்பது வருகிறது. காவல்துறை உருவாக்குவது என்பது மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதற்கு மாநில சட்டமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு எப்படி என்ஐஏ-வின் பெயரால் காவல் துறையை உருவாக்குகிறது? ஆனால் ஒன்றிய அரசு இது போலீஸ் கிடையாது என்று கூறுகிறார்கள். இந்த சட்டம் கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நடைபெற்ற பின்னர் அமெரிக்கா நெருக்கடி கொடுத்து, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததாகும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு விக்கி லீக்ஸ்சில், 2009-ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்ஐஏ-வின் அதிகாரி உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை அணுகி, இந்த சட்டத்தை எப்படி கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டபோது, அவர் இச்சட்டத்தை இந்திய அரசியல் சட்டத்தை மீறித்தான் கொண்டு வருகிறோம் என்று பதில் அளித்துள்ளார். ஆகையால் என்ஐஏ அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநில காவல்துறையை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. மத்திய அரசு கூறுவதைப் போல் என்ஐஏ என்பது காவல்துறை இல்லை என்றால், எப்படி எஃப்ஐஆர் போடுகிறார்கள்..? எப்படி கைது செய்கிறார்கள்..? எப்படி புலனாய்வு செய்கிறார்கள்..? எப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது..? மாநில காவல்துறை என்ன செய்கிறதோ அதையெல்லாம் இந்த என்ஐஏ செய்கிறது. ஆனால், இவர்கள் போலீஸ் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்..?
என்ஐஏ-வுக்கு என்று என்ன விதிமுறை உள்ளது..? மாநில காவல்துறைக்கு சிஆர்பிசி உள்ளது. அதனை மீறி அவர்கள் செயல்பட முடியாது. நீதிமன்றம் தலையிட முடியும். ஆனால் என்ஐஏ-வுக்கு இதுபோன்ற எந்த விதிமுறையும் கிடையாது. தன்னிச்சையாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தேச இறையாண்மைக்கு விரோதமாக செயல்பட்டார்களா..? எங்கேனும் குண்டு வைத்தார்களா.? கொலை, கொள்ளையடித்தார்களா..? தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தார்களா..? வெளிநாட்டில் எதையும் காட்டிக் கொடுத்தார்களா..? ஆர்எஸ்எஸ்காரர்கள், விஞ்ஞானிகள் கூட வெளிநாட்டில் காட்டிக் கொடுத்துள்ள செய்திகள் உண்டு. ஆனால் அவர்கள் மீது யூஏபிஏ வழக்கு இல்லை. என்ஐஏ கைது இல்லை.
அண்மையில்கூட ஒரு விஞ்ஞானி பெண் சபலத்திற்கு ஆசைப்பட்டு பாகிஸ்தானுக்கு ஆவணங்களை விற்பனை செய்துள்ளார். ஆனால் அதுபோன்ற நபர்களை என்ஐஏ கைது செய்ததா..? ராணுவ ரகசியத்தை விற்றதாக இதுவரை 12 விஞ்ஞானிகளுக்கும் மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் மீது என்ஐஏ வழக்கு தொடுத்துள்ளது? அந்த வழக்குகளெல்லாம் என்ன ஆயின..?
ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் கையில் வெடிகுண்டோ, துப்பாக்கியோ வைத்திருந்தால் என்ஐஏ-வைப் பொறுத்தவரை அவை வெறும் கற்கள்தான். ஆனால் ஒரு இஸ்லாமியர் கையில் கல்லோ குச்சியோ இருந்தால்கூட அது வெடிகுண்டு, துப்பாக்கி என உருவகப்படுத்தி தான் இந்த என்ஐஏ செயல்பட்டு வருகிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011 வரையான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 20 சதவிகித வழக்குகள் என்ஐஏவில் பதிவானதென்றால், அதற்குப் பிறகான மோடியின் ஆட்சியில் 80 சதவிகித வழக்குகள் என்ஐஏவில் பதிவாகின்றன. இந்நிலையில் மாநில காவல்துறை எதற்கு என்பதுதான் என்னுடைய கேள்வி.
எதிர்காலத்தில் நடைபெறலாம் என்ற அடிப்படையிலேயே என்ஐஏ-வின் கைதுகள் நடைபெறுகின்றன. பீமா - கோரேகானில் என்ன நடந்தது? பிஎஃப்ஐ-யில் என்ன நடந்தது? ஏன் அங்கெல்லாம் கைதுகள் நடைபெற்றன. இவர்கள் இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதற்காக பேசுகிறார்கள், சதி செய்கிறார்கள். ஆகையால் வருகின்ற 2047-இல் இதையெல்லாம் செய்வார்கள் என்று குற்றம்சாட்டி இன்று கைது செய்கிறீர்கள்.
ஆனால் கடந்த ஆண்டு இதே இந்தியாவில் சாமியார்கள் சபை என்ற ஒன்று கூடி, இந்த நாட்டில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று பேசினார்கள். அவர்கள் மீது எத்தனை யுஏபிஏ வழக்குகள், என்ஐஏ வழக்குகள் போடப்பட்டன? இந்த அரசியலமைப்புச் சட்டத்தையே நிராகரித்துவிட்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான வரைவறிக்கையே துறவிகள் அமைப்பு என்ற இந்து சனாதனவாதிகளால் வைக்கப்பட்டுவிட்டது.
அவையெல்லாம் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் வராதா..? இதுவரை என்ஐஏ இந்து சனாதன, பயங்கரவாத அமைப்புகளில் இருப்போர் மீது வழக்குத் தொடுத்துள்ளது..? அதில் எத்தனை பேரை கைது செய்துள்ளது? என்ஐஏ-வின் பெரும்பாலான வழக்குகள் இஸ்லாமியர்களை, இடதுசாரிகளை, மணிப்பூர் குழுக்களை குறிவைத்தே போடப்பட்டு வருகின்றன. பதிவாகும் 100 சராசரி வழக்குகளில் 35 வழக்குகள் இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து போடப்படுகிறது. ஆகையால் என்ஐஏ என்ற நிறுவனமே பாஜக, ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு உதவுவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பது இன்று நேரடியாகத் தெரிகிறது.
இவற்றையெல்லாம் விட மிக முக்கியமானது. இது மாநில உரிமைகளை நேரடியாக கைவைக்கிறது. இந்தியாவிலுள்ள மாநிலங்கள் அனைத்தும் தனித்த சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட அமைப்புகளாகும். மாநிலங்கள்தான் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்கக்கூடிய கடமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது.
மத்திய அரசு, ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ஐஏ அலுவலகத்தை நிர்வகிக்கிறது என்றால், தமிழ்நாடு காவல்துறை வாட்ச்மேனாக செயல்படுகிறதா..? என்ஐஏ-வால் ஒரு கைது மதுரையில் நடைபெறுகிறது என்றால், அது மதுரை காவல்துறை தலைவருக்கோ, காவல்துறை ஆணையருக்கோ தெரியப்படுத்தப்படுவதில்லை. இவர்களெல்லாம் ஐபிஎஸ் படித்துவிட்டு எதற்காக இங்கே பணி செய்கிறார்கள்? மாநில முதல்வர், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை மதிக்கமாட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்?
மொத்தத்தில் தற்போது நடைபெற்றிருப்பது நீதித்துறை, வழக்கறிஞர்கள் தொழில், மாநில உரிமைகள் மீதான தாக்குதல் என்பதுதான் பொருள். இந்த அடிப்படையில்தான் என்ஐஏ சட்டம் என்பதே கூடாது என்பது எங்களது வாதம். என்ஐஏ-வால் 94 சதவிகிதம் பேர் தண்டனை பெற்றுள்ளதாக அவர்கள் புள்ளிவிபரம் காட்டுகிறார்கள்.
கடந்த 2022ஆம் ஆண்டில் பதிவான 38 வழக்குகளிலும் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்தில்கூட இந்த அளவிற்கு கிடையாது. ஆனால் யுஏபிஏ வழக்குகளில் 19 சதவிகிதம்தான் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ஐஏ-வில் மட்டும் எப்படி சாத்தியம்..?
குறிப்பிட்ட வழக்கில் நான்கு பேரை கைது செய்து, இதில் தொடர்பே இல்லாத 5-ஆவது நபரை இதில் சேர்த்துவிடுவார்கள். அவரையும் உள்ளே அனுப்பிவிடுவார்கள். 5 அல்லது 6 ஆண்டுகள் சிறைக்குள் அவதிப்படும் அவரை பிறழ்சாட்சியாக மாற்ற பேரம் பேசுகிறார்கள். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அந்நபரை பிறழ்சாட்சியாக்கி விடுகிறார்கள். இப்படித்தான் வழக்குகளை நிரூபணம் செய்கிறார்கள்.
இதுபோன்ற வழக்குகளில் வேறு வழியின்றி ஒத்துக்கொள்ளச் செய்தே இவர்கள் 'கன்விக்சன்' பெறுகிறார்கள். என்ஐஏ முறையாக புலனாய்வு செய்வதே இல்லை. அதேபோன்று விசாரணை முறையில் சுதந்திரமே கிடையாது. என்ஐஏ ஆய்வாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துவிட்டால், அவருக்கு ஆண்டுக்கணக்கில் பிணை கிடைக்காது. என்ஐஏ ஆய்வாளரே இங்கு முழு அதிகாரம் படைத்தவர். பாதிக்கப்பட்ட நபருக்கோ தரப்புக்கோ எந்த உரிமையும் வழங்கப்படாமல்தான் என்ஐஏ வழக்குகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட நபர் இந்த வழக்கில் எவ்வாறு வென்று தன்னை நிரூபித்துக் கொள்ள முடியும்..?
ஆக மொத்தத்தில் என்ஜஏ என்ற நிறுவனம் இந்திய ஜனநாயகத்திற்கு, அரசியல்சட்டத்திற்கு கேடு விளைவிப்பதாகும். இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு மிகவும் கீழே இறங்கிவிட்டது. அதற்கு என்ஜஏ முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த என்ஐஏ சட்டத்தை எதிர்த்து சட்டீஸ்கர் மாநில அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 131பிரிவின்படி, இந்த சட்டம் நேரடியாக அரசியல் சட்ட விரோதமானது, மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விழித்துக் கொள்ள வேண்டும். அனைவரும் என்ஐஏ-க்கு எதிராக வழக்குத் தொடுப்பதுடன் சட்டமன்றங்களில் தீர்மானம் இயற்றவும் வேண்டும். தற்போது இஸ்லாமியர்களைக் குறிவைக்கிறார்கள். நாளை எதிர்க்கட்சிகள் அனைவரையும் குறிவைப்பார்கள். மாநில அரசு நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளையும் குறிவைப்பார்கள்.
அன்றைக்கு இதை எதிர்த்துப் பேச யாரும் இருக்க மாட்டார்கள். இதனை மாநில அரசுகளும் அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். இது இஸ்லாமியர்களின் பிரச்சனையல்ல. இந்திய ஜனநாயகம், நீதி நிர்வாகம் தொடர்பான பிரச்சனை. எனவே என்ஐஏ-வின் அராஜகங்களுக்கு, அரசியல் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.