மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அழகரசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், "சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா சோலார் எனர்ஜி என்கிற தனியார் நிறுவனம் வேளாண் நிலங்களை ஆக்கிரமித்து அப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்குச் செல்லும் கால்வாய்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிராமங்களில் உள்ள கால்நடை மேய்ச்சல், வேளாண் பணிகளுக்கு உள்ள நீர்ப்பிடிப்பு ஊரணியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே தனியார் சோலார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர்ப்பிடிப்புகளை மீட்டுத்தரக் கோரி அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகள் விளம்பர நோக்கத்திற்காகவே தாக்கல்செய்யப்படுகின்றன.
மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அலுவலர்கள் ஆய்வுசெய்து, அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தொடர்ந்து வழக்கு தொடர்பாக அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப் பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.