மதுரையைச் சேர்ந்த மணிமாறன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்கள், பனை ஓலைக் குறிப்புகள், அகழாய்வுப் பொருள்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன.
வரலாற்றுக்கு ஆதாரமாக பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கப் பெற்றதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு 1961ஆம் ஆண்டு கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியது.
இதன் முக்கியப் பணி தமிழ்நாட்டின் பழங்கால நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது, அகழாய்வு செய்து பழம்பெருமைக்கு ஆதாரமாகத் திகழும் பொருள்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை, சிற்பம் போன்றவற்றை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவையே.
65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை
பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டு, கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. ஆனால் அவை இன்று வரை பதிப்பித்து வெளியிடப்படவில்லை.
ஆகவே மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுக்களை, தமிழ்நாடு தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்புச் சட்டப்படி, பாதுகாக்கவும், நவீன தொழிநுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
கல்வெட்டியல் கிளை பெயர் மாற்றம்
இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆக.19) நீதிபதிகள், கிருபாகரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, ’தமிழ் கல்வெட்டியல் கிளை’ எனப் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டது.
மேலும், ”தொல்லியல்துறை தமிழ் தொடர்பான அனைத்து வரலாற்று ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு ஆறு மாதத்திற்குள் மாற்ற வேண்டும்.
தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு ஆறு மாதங்களுக்குள் செய்து தர வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டேனா? - அப்பாவு விளக்கம்