மதுரை: மதுரை விளாங்குடியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக சீதாராமன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
அவர் குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தொடர்ந்து தாமதம் செய்து வந்தார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனும் இது தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் போது அவரை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பதோடு குற்றவாளிகளும் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களிடம் நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.
ஆகவே மதுரை மாவட்ட போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக சீதாராமன் செயல்பட இடைக்கால தடை விதிப்பதோடு, அவரை பதவியில் இருந்து நீக்கி இந்த பதவிக்கு நேர்மையான தகுதியுடைய நபர் ஒருவரை நியமிக்க உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை விசாரத்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, மதுரை மாவட்ட போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக சீதாராமன் செயல்பட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர்.
மேலும் வழக்குரைஞர் சீதாராமன் மற்றும் அவரது குடும்ப சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஒரு மாதத்தில் லண்டனில் இருந்து வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்!