மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது "எனது தாயார் கடந்த 1990ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் காஞ்சிரகோடு அரசுப் பள்ளியில் தூய்மை பணியாளராகச் சேர்ந்தார். அவரை நீண்ட நாளாகப் பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தனர். இதனால் அவர் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் பேரில் அவரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் 2000ம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டு வரை எனது தாயாரின் பணியை வரைமுறைப்படுத்தி உரியப் பணப் பலன்களை வழங்கும்படி மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
அதற்கு எதிராக அரசு சார்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டு தள்ளுபடியாகின. தற்போது ஓய்வு பெற்ற எனது தாயார் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக உள்ளார். எனவே அவரது பணியை 1990ஆம் ஆண்டு முதல் வரைமுறைப்படுத்தி ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்கவும், இதற்குக் காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனது தாயாருக்காக மனுதாரர் தானே நேரடியாக (Party in person) இந்த வழக்கைத் தாக்கல் செய்து அதில் அவரே ஆஜராகி வழக்கை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இது போன்ற மனுக்களைத் தொடக்க நிலையிலேயே திருப்பி அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாட்டின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு: விவரங்களை வெளியிட்ட பீகார் அரசு!