குளித்தலையைச் சேர்ந்த மது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சீரமைக்கக் கோரி மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அதில், ”கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடைபிடிக்கப்படும் வழிமுறைகளால் எவ்விதத்திலும் கல்வியின் தரம் உயரவில்லை. எனவே கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சீரமைக்க வேண்டும். வேறு பள்ளிக்கு மாறும்போது, மாற்றுச் சான்றை கட்டாயமாக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வியின் தரம் மோசமாகிவருகிறது என்றும், இரண்டு ஆண்டுகளில் நான்காயிரம் அரசுப் பள்ளிகள் மூடவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது என்றும் மனுதாக்கல் செய்த தரப்பு வாதிட்டது.
பள்ளிகளை இணைக்க மட்டுமே அரசுக்கு திட்டம் உள்ளது என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து அரசு ஆய்வு செய்ய தெரிவித்தனர். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:8ஆம் வகுப்புக்கு ஒரே பாட புத்தகம் தான்! வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது!