மதுரை வழக்கறிஞர் விஜய கோபால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "ஜாமின் பெற்றவருக்குப் பிணை கொடுத்தவர்கள் செய்த முறைகேட்டிற்காக தம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நான் வழக்கறிஞராக எனது பணியை செய்தேன். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே, என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு நேற்று (ஏப்ரல்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிணை தாரர்கள் கையெழுத்து மற்றும் ஆவணங்கள் போலியானவை என்றால் பிணை கொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். இந்த வழக்கில் பிணை கையெழுத்து இட்ட மணி மற்றும் முத்துக்கருப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் தயாரிக்கவில்லை. பிணை கையெழுத்து இட்டவர்கள் நீதிமன்றத்துக்கு ஆவணங்களைக் கொடுத்து உள்ளனர்.
வழக்கறிஞர் எந்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கறிஞர் மீது குற்றம் சுமத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாது என்றார்.
மேலும், "பாவம் செய்யும் ஆத்துமாவே சாயும். தகப்பனின் அக்கிரமத்தை மகன் சுமக்கமாட்டான் - தகப்பன் மகனின் அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான் என்ற பைபிளின் வாசகங்களை மேற்கோள் காட்டிய நீதிபதி இது போல தான், "வழக்கு தொடுப்பவரின் பாவங்களை வழக்கறிஞர் சுமக்க மாட்டார்" என்று கருத்து தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞரை விடுவித்து உத்தரவிட்டார். இதில், பிரதான வழக்கு தொடரவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வீடியோ எடுத்தது யார் ? அது மாணவியின் குரல் தானா? - நீதிபதி கேள்வி