மதுரை: பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பகிர்ந்த வழக்கில் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் குமார், முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிரசாந்த் உம்ராவ் குமார் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக இருப்பதாகவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இவர் கடந்த 3 ஆம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் கொடூரமாக தாக்கப்படுவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பிரசாத் உம்ராவ் குமார், வீடியோ தான் தயாரிக்கவில்லை என்றும், வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்ட் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை என்றார். மேலும் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும்." என மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், நீதிபதிகள் மனுதாரரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இது போன்ற வீடியோ வெளியிட்டதால் தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
இது குறித்த மனுவை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "பிரசாத் உம்ராவ் குமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். 15 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். மனுதாரர் இது போன்ற வேறு ஏதும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டால் முன் ஜாமினை ரத்து செய்து உடனடியாக காவல் துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம்" என தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து போலீசார் மற்றும் அரசு தரப்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் பின் நிலைமை சீரானது.
இதையும் படிங்க: டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்! 6 பேர் கைது - ஆம் ஆத்மிக்கு தொடர்பா?