தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஐந்தாம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால், திருப்பனந்தாள் காவல் துறையினர், அவர் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கும் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம் என அரசுத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ரஞ்சித்திற்கு ஆதரவாகத் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்கக்கோரி வழக்கறிஞர் ரஜினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லை என நீதிபதி கூறினார்.
அதற்கு வழக்கறிஞர் ரஜினி தரப்பில், அது தொடர்பாக சில நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதேபோல் மனுதாரர் ரஞ்சித் தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதுவரை பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.