இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூன் 1ஆம் தேதி முதல் காலை 10:30 மணியிலிருந்து நண்பகல் 1:30 மணி வரை வழக்கமான நீதிமன்ற பணிகள் நடைபெறும். நீதிமன்ற அறைகளில், தகுந்த இடைவெளி உள்ளிட்ட உரிய விதிமுறைகளை பின்பற்றி வழக்கமான முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.
மனு தாக்கல் செய்த வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நண்பகல் 2:30 மணியில் இருந்து 4:45 மணி வரை, வழக்கின் முக்கியத்துவம் கருதி, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்படும்.
கரோனா ஊரடங்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதேபோல், மின்னஞ்சல் மூலமே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளுடன் வழக்கமான நீதிமன்ற வழக்கு விசாரணையும், வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகுந்த இடைவெளி, வழக்கறிஞருக்கான புதிய ஆடை கட்டுப்பாடு, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், எப்போது வேண்டுமென்றாலும் இந்த தளர்வு திரும்பப் பெறப்படும்". இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.