கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த ஏழு பேர் இரண்டு படகுகளில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு அருகே படகினில் வந்துள்ளனர். இவர்கள் கடலோரக் காவல் படையினரைக் கண்டதும் வேகமாகச் சென்றனர்.
இதையடுத்து அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள் இலங்கையிலிருந்து கடல் வழியாகத் தங்கக் கட்டிகளைக் கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு படகுகளில் வந்த ஏழு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளைப் பறிமுதல்செய்தனர்.
இந்த வழக்கு தனுஷ்கோடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்ட பின்னர் இவர்களது பிணை மனுவினை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கைதான இலங்கையைச் சேர்ந்த அந்தோணி சுகந்த் என்ற சுகந்தன், வினிஸ்டோ, லூயிஸ் அலோசியஸ் ஆகிய மூன்று பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை காணொலி வாயிலாக விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மூன்று பேரின் பிணை மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் குறித்து அவதூறு, வாட்ஸ் ஆப் அட்மினுக்கு ஜாமீன் மறுப்பு!