ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டேனியல், கிலாப்டிக் ஆகிய இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிணை மனுவினை தாக்கல் செய்திருந்தனர்,
அந்த மனுவில், "இலங்கையில் பல்வேறு கொலை வழக்குகளில் ஈடுபட்டுள்ள சங்க சிரந்தா, முகமது சப்ரஸ் ஆகிய இரண்டு பேரை இலங்கைக்கு தப்பிக்க உதவியதற்காக வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 13ஆம் தேதி விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டோம்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த 12ஆம் தேதி பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, இந்த வழக்கில் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு இன்று நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.