விருதுநகரைச் சேர்ந்த சுந்தர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
"விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள மகராஜபுரத்தில் பட்டா நிலத்தில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி, விருதுநகர் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு அருகே துணை ஆறு ஓடுகிறது. சுற்றிலும் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன.
தனியார் நிலத்தில் உவரி மண் அள்ளுவதாக அனுமதி பெற்று, அருகிலுள்ள ஆற்றுப் படுகையில் சவுடு மண், மணல் அள்ளி இரவு பகலாக லாரிகளில் கடத்துகின்றனர் . விதிப்படி 2 அடி ஆழத்திற்குதான் மண் அள்ள வேண்டும். ஆனால், இங்கு 100 அடி ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர். விதிமீறி மண், மணல் அள்ளுவதால் அப்பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளைக்குள்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் உள்ளிட்ட மண் அள்ளுவதற்கு தனியார், பட்டா நிலங்கள், கண்மாய்களில் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் விதியை மீறி அனுமதி வழங்கியுள்ளனர். எனவே, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள மகராஜபுரத்தில் தனியார் பட்டா நிலத்தில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று விதி மீறி மண், மணல் கடத்திய நபர் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வத்திராயிருப்பு அருகேயுள்ள மகராஜபுரத்திற்கு பட்டா நிலத்தில் உபரி மண் அள்ள அனுமதி வழங்கிய விருதுநகர் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் உத்தரவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: "உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 5001 வேட்பு மனுக்கள் தாக்கல்" - மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!