மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், "கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்களும் அடங்குவர்.
மாநிலம் முழுவதும் சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்கள் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், சலவைத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் 40 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாமலேயே உள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும், கைத்தறி தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையை வழங்கியதுபோல சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்களுக்கு எவ்விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. ஆகவே, மாநிலம் முழுவதும் உள்ள சலவை மற்றும் துணி தேய்க்கும் தொழிலாளர்களுக்கும் கரோனா நிவாரண நிதியை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.