சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த நிலையில், சென்னை பிரீஸ்ட் கல்லூரியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தேன். மருத்துவக்கல்வி நடத்த பிரிஸ்ட் கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என அறிவிப்பு வெளியானதால், நீட் தேர்வு எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றேன்.
அரசு மருத்துவக்கல்லூரியில் சேர இந்த மதிப்பெண்கள் போதுமானவை என்றாலும், விருப்பத்தின் பேரில் தனியார் கல்லூரி ஒன்றில் 22 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பதிவுக்கட்டணமாகச் செலுத்தி பயின்றுவருகிறேன். இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எவ்விதமான ஆதாரமுமின்றி காவல் துறையினர் என்னைக் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
இந்த வழக்கில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஏற்கனவே கீழமை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டன. ஆகவே, இந்த வழக்கில் இருவருக்கும் பிணை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோன்று, சென்னையைச் சேர்ந்த டேவிஸ், அவரது மகன் ராகுல் டேவிஸ் ஆகியோரும் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரியதால் வழக்கை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.