தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், "தாகபூமி" என்னும் குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிடக் காத்திருந்தார்.
இந்நிலையில், இதனை இயக்குநர் ஏ.ஆர். முருக தாஸ் "கத்தி" என்ற பெயரில் நடிகர் விஜய்யை வைத்து திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக இயக்குநர் முருக தாஸ், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி உரிமையியல் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதே பிரச்னைக்காக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அன்பு ராஜசேகர் புதிய வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில், லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் , அதன் நிர்வாக இயக்குநர் நீல்கண்ட நாராயண், இயக்குநர் முருக தாஸ், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி சுபாஸ்கரன் , ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் , நடிகர் விஜய் ஆகியோர் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "எங்கள் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. கத்தி திரைப்படத்திற்கும், தாகபூமி என்ற குறும்படத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை. தஞ்சாவூரில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அனைவருக்கும் பொதுவானது.
இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி 'தாகபூமி' குறும்படம் எடுத்தது என்பதை ஏற்க முடியாது. ராஜசேகர் என்பவர் 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி, இயக்குநர் முருக தாஸிடம் உதவி இயக்குநர் பணி வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அது கிடைக்காததால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுகின்றார்.
காப்புரிமை சட்டப்படி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. இதற்கு பொருந்தாது. எனவே கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த மனு மீதான வழக்கு நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், ' ஒரு சம்பவத்தை வைத்து படம் எடுக்கப்படுகிறது. அதை அவருடைய கதை என்று உரிமை கோர முடியாது. மேலும் இந்தப் படம் எடுப்பது என்பது இயக்குநரைச் சார்ந்தது. ஆனால், மனுதாரர் படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரையும் மனுதாரராகச் சேர்த்துள்ளார்.
இவர்களுக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை. விளம்பர நோக்கம் மட்டுமே உள்ளது' என்று வாதிட்டார். இதனைத்தொடர்ந்து நீதிபதி G.R. சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ' வழக்கை நடத்தும் தஞ்சாவூர் நீதிபதி "கத்தி" திரைப்படத்தையும், "தாகபூமி" குறும் படத்தையும் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்த பின்பு இரு படங்களிலும் புகார் தாரர் கூறும் ஒற்றுமையும், உரிய முகாந்திரமும் இருந்தால் விசாரணை நடத்தலாம். இந்தப் படத்தின் இயக்குநர் முருகதாஸை மட்டுமே எதிர் மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும்.
திரைப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா, அதன் நிர்வாக இயக்குநர் நீல்கண்ட நாராயண், நிர்வாக இயக்குநர்கள் கருணாமூர்த்தி சுபாஸ்கரன் , ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் மீது இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்' என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: