மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார், முருகன், விக்னேஷ் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், 'கடந்த ஏப்ரல் 2023ஆம் ஆண்டு, 59 காலி பணியிடகளுக்காக சிறைத்துறை உதவி ஜெயிலர் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவை துறை பணிக்காக TNPSC மூலம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடத்திற்காக மனுதாரர்கள் விண்ணப்பித்து அதற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது.
கணினி மூலம் தேர்வு நடைபெற்ற தேர்வின் போது, கேள்விக்கான பதிலை அழுத்தும்போது வேறொரு பதில் பதிவானது. இது தொடர்பாக, கண்காணிப்பு அலுவலரிடம் கேட்டபோது, சரியாக தான் உள்ளது என பதிலளித்தார். தொடர்ந்து தேர்வுக்கான முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்போது மனுதாரர்களின் மதிப்பெண்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட மிகக்குறைவாக இருந்தது.
தொடர்ந்து தேர்வுக்கான விடைத்தாளை கோரி, டிஎன்பிஎஸ்சியிடம் விண்ணப்பித்த போது, அதற்கான எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதுபோன்று பலமுறை டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் குளறுபடிகள் நடைபெற்று உள்ளது. மற்ற போட்டித்தேர்வுக்கான நடைமுறைகளைப் பின்பற்றி தேர்வாளர்களுக்கு அதற்கான விடைகளை தருவதற்கான நடைமுறையை டிஎன்பிஎஸ்சி பின்பற்ற வேண்டும்.
எனவே, கணினி மூலம் நடைபெற்ற தேர்வின் இறுதி விடைத்தாளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். மனுதாரர்கள் அளித்த விடைகளை ஆய்வு செய்யவும், அதுவரை மனுதாரர்களுக்கு சிறைத்துறை உதவி ஜெயிலர் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவை துறை பணியை காலிப்பணியிடங்களாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு இன்று (அக்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் தேர்வுக்கான விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே இறுதி விடைத்தாள் (Answer key) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. 15ஆம் தேதி காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்வுக்கான இறுதி விடைத்தாளை வெளியிடுவதில் என்ன விதிகள் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது என தெரியவில்லை. முடிந்த தேர்வுக்கான விடைத்தாளை வெளியிடுவதில் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது என கேள்வி எழுப்பியதோடு, வரும் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்; ஆட்சியாளர்கள் இருக்கும் போது நடிகர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும்: ச.ம.க. தலைவர் சரத்குமார் கேள்வி