அண்ணா பல்கலைக்கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் செயலாளர் நாகூர் கனி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், "கடந்த 30.9.2020 அன்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உதவி பேராசிரியர், பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பல காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய கல்வி நிறுவனங்கள் நிறுவனச் சட்டம் 2019இன்படி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வகையில், முன்பு வெளியான அறிவிப்பினை மாற்றி, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி, அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இ துகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.