மதுரை: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு விசாரணையில், காவிரி உரிமைக்காகப் போராட்டம் நடத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால், வரம்புகளை மீறி போராட்டங்களை நடத்துவது விரும்பத்தக்கது அல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், 'தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றோம்.
இந்த நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வழங்க வேண்டிய தண்ணீரைக் கர்நாடகா அரசு வழங்க மறுப்பதால், தமிழக அணைகளில் உரிய நீரின்றி சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை பயிர்கள் முற்றிலுமாக கருகிப் போய்விட்டன. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை என்பதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது.
ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரையும் கர்நாடகா இன்னும் வழங்கவில்லை. கர்நாடகா அரசு தண்ணீர் தர வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் தரும் வகையிலும் மேலும் 4 வாரங்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி தரக்கோரியும், போராட்டத்திற்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி'யும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போராட்டம் என்ற பெயரில் காவிரி ஆற்றுக்குள் இறங்கி கர்நாடகாவிற்கு எதிராக பாடை கட்டி, ஈமச்சடங்கு நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் மீது 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, காவிரி உரிமைக்காகப் போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், வரம்புகளை மீறி போராட்டங்களை நடத்துவது விரும்பத்தக்கது அல்ல. நீதிமன்றம் உத்தரவுகளை மதித்து காவிரிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தலாம். இந்த மனு குறித்து அரசுத்தரப்பில் வரும் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சொந்த உழைப்பில் உன்னதம்! நீர்நிலைகளை தூர்வாரிய கிராம மக்கள்! 40 ஆண்டுகால கனவு சாத்தியமானது எப்படி?