மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சஞ்சய் ராய் தலைமையிலான மத்திய தொழில்நுட்பக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஜெ.ஐ.சி.ஏ. அமைப்பின் அதிதிபுரா என்பவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவமனையின் முதல்வர் வனிதா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வனிதா, 'எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஜப்பானிலிருந்து வந்த எட்டு பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மருத்துவமனை அமையவுள்ள தோப்பூர் பகுதிக்குச் சென்று மருத்துவமனை அமையவுள்ள இடம், சாலை வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகள், மக்களின் வருமானம், மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
அதேபோல் அரசு இராசாசி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தனர். இதையடுத்து மருத்துவமனை அமைக்கத் தேவையான நிதி உதவி பெறுவது குறித்து நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் சிறப்புக் குழுவினர் தெரிவித்தனர். அவர்கள் அளித்த விளக்கத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்பதற்கான அறிகுறி தென்படுகிறது' என்றார்.