மதுரை: மதுரையின் அடையாளமாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் திகழ்கிறது. மதுரையை ஆண்ட விஜயநகரப் பேரரசின் முக்கிய பெண்ணரசியான ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையாகத் திகழ்ந்த காந்தி அருங்காட்சியகம், ஆங்கிலேயர் காலத்தில் புனரமைக்கப்பட்டு, ஆட்சியரின் முகாம் அலுவலகமாகத் திகழ்ந்தது. சுமார் 600 ஆண்டுகள் பழமையானதாகும்.
விடுதலை பெற்ற இந்தியாவில், இந்த அரண்மனை மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வண்ணம் அவருக்கு இந்தியாவிலேயே முதல் அருங்காட்சியகம் மதுரையில்தான் அமைக்கப்பட்டது. கடந்த 1959ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேருவால் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் உறுப்பினராக நாதுராம் கோட்சேவால் கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டபோது, காந்தியடிகள் அணிந்திருந்த மேலாடை, அவரது ரத்தக்கறையுடன் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இன்றைக்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.3 கோடி விடுவிப்பு
மேலும் காந்தியடிகளால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள், கடிதங்கள் இங்கே பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் காந்தியின் அஸ்திக் கலசத்திற்கு சமாதி அமைத்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தப்படுகிறது. மதுரைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு காந்தி நினைவு அருங்காட்சியகம் முக்கிய சுற்றுலாத்தலமாக இன்றளவும் திகழ்கிறது.
இந்நிலையில் காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கழிவறை, லிஃப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தற்போது முதற்கட்டமாக ரூ.3 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் தலைமையிலான குழுவினர் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் திட்ட மதிப்பீடு செய்யும் பணியை இன்று (மார்ச் 17) தொடங்கினர். திட்ட வரையறை தயாரிக்கும் பணி ஒரு வாரத்தில் முடிவடையும் எனவும், அதன்பின் அனுமதி கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உக்ரைன் போர்: சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி வாக்களிப்பு