மதுரை: மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் இளைய சகோதரர் வடிவேலு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் காந்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர் மற்றும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளேன்.
மதுரை காந்தி மியூசியத்தில் சுமார் 20 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காந்திஜியின் சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் பரப்புவதும் காந்தி அருங்காட்சியகத்தைப் பராமரிப்பதும்தான் இவர்களின் முக்கிய நோக்கமாகும். இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காந்திய சித்தாந்தத்தின் பாதுகாவலர்களாக கருதப்பட்டாலும், தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தால் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க பலமுறை முறையிட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் பராமரிப்புக்காகவும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் கூடுதலான நிதியை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மூன்று மாதத்திற்குள் மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்சேதுபதி மீது தொடர்ந்த வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்!