மதுரை மேலமாசி வீதி அடுத்த கந்தமுதலிதெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலக்ட்ரானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கடையில் இருந்து மொத்தமாக பொருட்கள் வாங்கிய ஏஜெண்ட்களிடம் பணம் வசூல் செய்து வருமாறு பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் கூறியுள்ளார். இதையடுத்து அவரும் ஏஜெண்ட்கள் பாக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44ஆயிரத்தை வசூல் செய்து கடைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் கடைக்கு வந்த பிரகாஷிடம், உரிமையாளர் நித்திஷ் வசூல் பணத்தைக் கேட்டபோது, பணத்துடன் பேருந்து நிலையத்திற்கு வந்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னிடம் இருந்த பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நித்திஷ், உடனே இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து, ஊழியரான பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த காவல்துறையினர், காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பணத்திற்கு ஆசைப்பட்டு திருடியதை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது நண்பரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பிரகாஷ், நண்பர் பாலுமணி ஆகிய இருவரையும் கைது கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். ஊழியர் ஒருவர் பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்ற முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.