மதுரை, மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி சுரேஷ். இவருக்கும் கருப்பாயூரணி அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகளான கற்பகவள்ளி என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்து இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதிச்சியம் பகுதியில் தனியாக வீடெடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு எதிரொலியாக ஹரிசுரேஷ் வேலை இழந்து தினசரி மது அருந்திவிட்டு மனைவி கற்பகவள்ளியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
மேலும், ஏற்கனவே திருமணத்தின்போது வரதட்சணையாகப் பெற்ற பணம் அனைத்தையும் செலவு செய்து, நகைகளையும் அடகு வைத்துவிட்ட நிலையில், கூடுதலாக வரதட்சணை கேட்டு தனது மனைவி கற்பகவள்ளியை துன்புறுத்தத் தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஹரி சுரேஷ், தனது மனைவி கற்பகவள்ளியை அடித்து உதைத்துள்ளார். தொடர்ந்து, மண்ணெண்ணெயை எடுத்து மனைவி கற்பகவள்ளி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் அலறியடித்து ஓடி வெளியேறிய கற்பகவள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த கற்பகவள்ளி நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் ஹரி சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.