தமிழ்நாடு முழுவதும் வேலூர் தவிர்த்து 38 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் மதுரை மாவட்டத்திலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்துவருகிறது.
மதுரையின் புறநகர்ப் பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் விறுவிறுப்பை எட்டியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். ஆனால் மதுரை நகரத்தில் மட்டும் இன்னும் பல்வேறு இடங்களில் மந்த நிலையிலேயே வாக்குப்பதிவுகள் நடைபெற்றுவருகின்றன.
மதுரை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் தனது வாக்கினை பசுமலையில் உள்ள சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் பதிவு செய்துள்ளார். அதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் ஹார்விபட்டியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் பெண்கள் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்ய உள்ளார்.
தற்போது மதுரையில் சித்திரைத் தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சிதான் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு அதனை உடனடியாக சரி செய்து வாக்குப்பதிவு தொய்வின்றி நடத்திட தேர்தல் அலுவலர்கள் முனைந்து செயல்பட்டுவருகின்றனர்.